Friday, December 3, 2010

பி.எஸ்.என்.எல். பாதுகாக்கப்பட வேண்டும் - சு.மகேந்திரன்

பொதுத் துறைகளை எவ்வாறு முட மாக்கி அதனை அழிப்பது என்பதற்கு, பிஎஸ் என்எல்லை தவிர வேறு நல்ல எடுத்துக் காட்டு வேறு எதுவும் தேவையில்லை.

நமது இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய நாட்டின் முதல் பொதுத்துறை நிறு வனத்தை திறந்து வைக்கும் சமயத்தில், நவீன இந்தியாவின் புனிதக் கோவில்கள் என பொதுத் துறை நிறுவனங்களை வர்ணித் தார். மையமான தொழிற்சாலைகளை உரு வாக்கி விஸ்தரிப்பு என்பதும், அடிப்படை கட்டுமானங்களை உருவாக்குவது என்பதும் புதிய அரசாங்கத்திற்கு மிக முக்கியமானதாக இருந்தது.

தொலைத் தொடர்புத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்ததால்,அரசு அதனை தனியார்களுக்கு தாரை வார்க்க விரும்பியது. அதன் அடிப்படையில் ‘ஓவர் சீஸ் கம்யூனிகேஷன்ஸ்’ என்னும் வெளி நாட் டுக்கு தொடர்பு தரும் சேவையை விஎஸ் என்எல் ஆகவும், மும்பை, தில்லி ஆகிய இரண்டு பெரு நகரங்களின் தொலைத் தொடர்பு சேவையை எம்டிஎன்எல் ஆகவும், இறுதியாக டிடிஎஸ்/டிடிஓ/டிஓடி ஆகிய அரசுத் துறை நிறுவனங்களை பிஎஸ்என்எல் ஆகவும் மாற்றியது.

பிஎஸ்என்எல்லின் தோற்றம்

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி 01.10.2000ல் பிஎஸ்என்எல் உருவாக்கப்பட் டது. அந்த சமயத்தில் அரசாங்கம், பிஎஸ்என் எல்லின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகவும், லைசென்ஸ் கட்ட ணத்தை திரும்பத் தருவதாகவும், தனியார் கம்பெனிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஏடிசி கட்டணத்தை தருவதாகவும், நஷ் டத்தை தரக்கூடிய கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு சேவை தரவேண்டிய அரசின் சமுதாயக் கடமையை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்வதால் உண் டாகும் நஷ்டத்தை ஈடுகட்ட யுஎஸ்ஓ நிதியி லிருந்து உதவி செய்வதாகவும் உறுதி அளித் தது. அவையெல்லாம் ஒரு சில காலம் வரை கொடுத்தது. உறுதிமொழி அளித்ததற்கு மாறாக அவையெல்லாம் தற்போது நிறுத்தப் பட்டு விட்டது அல்லது மிக மிக கடுமையாக குறைக்கப்பட்டு விட்டது.

நியாயமற்ற பாரபட்சப் போக்கு

பிஎஸ்என்எல் உருவாவதற்கு முன்னரே தனியார் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கு வது தொடங்கிவிட்டது. தனியார் நிறுவனங் களுக்கு 1995லேயே மொபைல் சேவை வழங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டு விட்டது ஆனால் டிஓடி மற்றும் எம்டிஎன் எல்லுக்கு மறுக்கப்பட்டது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லுக்கு 2002ஆம் வரு டம் தான் மொபைல் சேவைகளுக்கு லை சென்ஸ் வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆறு, ஏழு வருடங்களுக்கு பின்னரே லைசென்ஸ் வழங்கப்பட்டதால், வளர்ந்து வந்த சந்தையை தனியார் நிறு வனங்கள் கைப்பற்ற வசதி செய்து தரப் பட்டது. பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் கடுமையான நிர்ப்பந்தம் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டது. முதலில் மொபைல் சேவைகள் வழங்க குறிப் பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் அரசுக்கு 55,000 கோடி ரூபாய் வரு மானம் கிடைத்திருக்கும். ஆனால் ‘வரு வாயில் பங்கீடு’ என்ற கொள்கை அமலாக்கப் பட்டதால், அரசுக்கு வருமானம் மிகக் கடுமையாக குறைந்ததன் காரணமாக அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது.

பொதுத்துறை நிறுவனம் என்ற முறையில் பிஎஸ்என்எல்லுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கும் போது, தனியார் நிறுவ னங்களுக்கு இந்த விதமான கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிஎஸ்என்எல்லுக்கு கரு விகள் வாங்குவது தாமதிக்கப் பட்டது. ஏன் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நிறுத் தப்பட்டுள்ளது. அதன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டதால் புதிய இணைப்புகள் தர இய லாத நிலைமை உருவானது. சீனக் கம் பெனிகளின் கருவிகள் மற்ற கருவிகளை விட விலை குறைவானதாக உள்ளது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் சீனக் கம்பெனி களின் கருவிகளை வாங்குவதற்கு பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு தடை விதிக்கப் பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்கள் சீனக் கம்பெனிகளின் கருவிகளை வாங்க தாராளமாக அனுமதிக்கப்பட்டன. கிராமம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சேவையை வழங்குவது என்ற அரசின் சமூகக் கடமை யை பொதுத் துறை நிறுவனம் என்ற அடிப் படையில் பிஎஸ்என்எல் நிறுவனம் நிறை வேற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது.

அதேபோல தனியார் நிறுவனங்கள் முதலில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைகட்ட அனுமதிக் கப்பட்டனர். ஆனால் டிராய் நிர்ணயித்தப்படி உயர்த்தப்பட்ட சதவிகித அடிப்படையில் லைசென்ஸ் கட்டணத்தை கட்ட பிஎஸ் என்எல் நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்த அனைத்து விஷயங்களிலும் எந்த விதமான நியாயமும் இன்றி பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு பாகுபாடு காட்டப்பட்டது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட முதன்மை யான வாய்ப்புகளையும் அதிக ஆதாயங்களை யும் தனியார் நிறுவனங்கள் பெற்றது. அரசை பொறுத்தவரையில் தனது சொந்த நிறு வனத்தின் ஆதாயங்களை விட தனியார் நிறு வனங்களின் ஆதாயங்களே மிக முக்கிய மானதாக உள்ளது.

தனியார் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கி 6 அல்லது 7 ஆண்டுகள் கழித்து பிஎஸ்என்எல்லுக்கு மொபைல் தொலைபேசி களுக்கான லைசென்ஸ் வழங்கினாலும், தனது கடுமையான முயற்சியின் காரணமாக மொபைல் சேவையில் இரண்டாம் இடத் திற்கு முன்னேறியதோடு மட்டுமல்லாது, 2006ஆம் ஆண்டு முதலிடத்தை பிடிக்கும் போட்டியிலும் இருந்தது.

பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதை போல

2000-2001 முதல் 2008-2009 வரை யிலான காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஈவுத் தொகை, லைசென்ஸ் கட்டணம், வரி முதலியவற்றிற்காக, 40,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதனுடன், மாநில அரசாங்கங்களுக்கு விற்பனை வரி மற்றும் இதர வரிகளையும் கட்டி வருகிறது.

தகுதி படைத்த பொறியாளர்கள் மற்றும் திறன் படைத்த தொழிலாளர்கள் என மூன்று லட்சம் ஊழியர்களின் உழைப்பு சக்தி என்பது பிஎஸ்என்எல்லின் மிகப் பெரிய சொத்து. மக்களுக்கு சிறப்பான தொலைத் தொடர்பு சேவை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டு, நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றாக விவாதித்து முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் அதன் விரைவான அமலாக்கத்தையும் திட்டமிட வேண்டும். நிர்வாகமும் தொழி லாளர்களும் அதற்கேற்ற முறையில் தங்களது மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு தெளிவான மற்றும் உறுதியான முயற்சி என்பது அரசு தரப்பிலிருந்து அவசியம்.

அரசாங்கத்தின் பொதுத் துறை விரோத கொள்கைகள் மற்றும் தனியார் கம்பெனி களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மாற வேண்டும். இந்த பொதுத் துறை நிறுவனத் திற்கு ஆதரவான அணுகுமுறையை அரசாங் கம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவையான அளவிற்கு கருவிகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். 2007ஆம் வருடம் 4.55 கோடி மற்றும் 2010ஆம் வருடம் 9.3 கோடி இணைப் புகளுக்கான கருவிகள் வாங்கும் டெண்டர் கள் ரத்து செய்யப்பட்டதின் விளைவாக உருவாகி உள்ள கொள்ளளவு நெருக்கடி என்பதுதான் தற்போதைய சிக்கலான சூழ்நிலைக்கு காரணம்.

பங்கு விற்பனை/ஐபிஓ என்பது சர்வரோக நிவாரணி அல்ல. பன்னாட்டு பகாசுர கம்பெனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பிஎஸ்என்எல்-ஐ தாரைவார்ப்பதற்கான தனியார் மயத்தை நோக்கிய பயணத்தின் ஒரு படிதான் அது. பங்கு விற்பனை/ஐபிஓ ஆகிய வற்றின் முயற்சிகளை கைவிட வேண்டும்.

விருப்ப ஓய்வு அல்லது கட்டாய ஓய்வு திட்டங்கள் மூலமாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தினை முன்மொழிவதற்கு பதிலாக மிகப் பெரிய சொத்தான தற்போதுள்ள உழைப்பு சக்தியை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் என நாடு தழுவிய அளவில் ஒரு பலமான கட்டுமானத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ளது. அர்ப்பணிப்பு உணர்வும், உறுதிப்பாடும் மிக்க மூன்று லட்சம் உழைப்பு சக்தியை கொண்டுள்ளது. சாதாரண பொது மக்கள் சிறந்த சேவைக்காக பிஎஸ்என்எல்-ஐ எதிர்நோக்குகின்றனர்.

கட்டுரையாளர், மாவட்டச் செயலாளர், பிஎஸ்என்எல்இயு, தஞ்சை மாவட்டம்.

No comments:

Post a Comment