Sunday, December 5, 2010

அம்பேத்கரின் தனிமை ...



சிங்கக்குட்டிகள்
காலடியில் விளையாட
ஊஞ்சலில் அமர்ந்தபடி
சிரிக்கிறார் அமைச்சர்.

டிசம்பர் பத்து
எங்க சொத்துயென
நடந்தும்..
உட்கார்ந்தும்...
ஏதோ சிந்தித்தபடியும்...
கையசைத்தபடியும்...
எல்லாத் தெருக்களின்
மூலைகளிலும்
நின்று கொண்டிருக்கிறார்
முன்னாள் அமைச்சர்.

அடங்க மறுப்பேன்..
அத்து மீறுவேன்..
என்று திருகிய மீசையுடன்
கூட்டணித் தலைவரின் அருகே
அடக்கமாய் நின்று
கொண்டிருக்கிறது
கல்யாண வீட்டு வாசலில்
சிறுத்தை..!

மஞ்சள் நீராட்டு விழாவிற்குவரும்
பச்சைத்தமிழனே வருக..
காது குத்த வரும்
கலங்கரை விளக்கமே வருக...

பிரியாணிகடையை திறக்கவரும்
பெருமகனே வருக..
பியூட்டிபார்லர் திறக்கவரும்
பியூட்டியே வருக....

கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லி...
கருமாதிக்கு சேதி சொல்லி...
இலக்கியம் பேசவரச் சொல்லி..
இன்னும் விதவிதமாய்
இன்னும் வகைவகையாய்
எல்லாரும்..
யாரையோ..
எதற்கோ..
அழைத்துக்கொண்டெயிருக்கிறார்கள்.

அழைக்க ஆளில்லாமல்
அகண்டத் திரைகளில்
காலியான இருக்கைகளை
பார்த்தபடியே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அம்பேத்கர்.

(அம்பேத்கர் நினைவு தினம் - டிச.6)

எஸ்.கருணா

No comments:

Post a Comment