மியான்மரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓபாமா ஆற்றிய உரையையும், கோவை பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கில் கைதான மோகனகிருஷ்ணன் என்கௌன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையும் படித்துவிட்டும், கேட்டுவிட்டும் அன்று இரவு உறங்கச் சென்ற பிறகு ஒரு வேடிக்கையான கனவைக் கண்டேன். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப்படைகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் பெரியவர்களும், பெண்களும் கடந்த சில ஆண்டுகளாக கொல்லப்படுவதற்குக் காரணமான ஜார்ஜ் புஷ்çrயும், பாரக் ஒபாமாவையும் தமிழக போலீசார் கைது செய்து, அவர்களை விசாரிப்பதற்காக ஆப்கானிஸ்தான் கொண்டு செல்ல சென்னை சென்ட்ரலில் ரயில் ஏறும்போது அவர்கள் தப்பித்துச் செல்ல, கூவம் கழிவை எடுத்து போலீசார் மீது வீச, பதிலுக்கு போலீசார் அவர்களைப் போட்டுத்தள்ளினர். நகைச்சுவையான கனவும் கூட.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் அமெரிக்கப்படைகளால் பறிக்கப்பட்டுக் கொண்டே வருவதை விக்கிலீக்ஸ் இணையதளம் அப்பட்டமாக வெளிப்படுத்தியதைக் கண்டு அமெரிக்காவோ, அதன் தலைவரோ எந்த வெட்கமும் அடையாமல், பிறிதொரு நாட்டிற்குச் சென்று வேறொரு நாட்டைப் பற்றிய மனித உரிமை மீறல்களைக் குறித்துப் பேச முடிகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒபாமா பேசியவுடன் கைதட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து, அவர் பேசும் போது நாகரிகம் கருதி குறுக்கிடாமல் இருந்திருக்கலாம். அதன் பின்னர் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கலாமே! அதற்கானத் தார்மீகத் துணிவு நமது உறுப்பினர்களுக்கு இல்லை என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
மீண்டுமொருமுறை தங்களின் என்கௌன்டர் சாகசத்தை கோவையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழக போலிசார். குழந்தைகளைக் கொன்ற குற்றவாளிகள் கொடூரமானவர்கள். சந்தேகமேயில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும். கொலைக்கான முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். அவர் கொல்லப்பட்டதனால் பல தகவல்கள், பல உண்மைகள் வெளி வர வாய்ப்பில்லாமல் போய் விட்டது. திரும்ப திரும்ப நாம் வலியுறுத்துவது ஒன்றுதான் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
உடனடியான மரணதண்டனை என்பது சமூகத்தின் பொது மனசாட்சிக்கு உகந்து நிறைவேற்றப்படுவதாக இந்த என்கௌன்டரை ஆதரிப்பவர்கள் கூறினாலும் சமூகத்தின் பொது மனசாட்சிப்படி உண்மை எப்போதும் அணிவகுப்பதில்லை. அறநெறிகளை சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் மதித்து நடக்கும் என்று கருதவும் முடியாது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் வருடந்தோறும் வருமானம் அதிகரித்துக் கொண்டே போவதையும், தேர்தல் காலங்களில் ஓட்டுக்குப் பணம் பெறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதையும் கொண்டு குடியையும், லஞ்சத்தையும் தமிழக சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சி எனவும், அறப்பண்புகள் எனவும் ஏற்றுக்கொள்ள முடியுமா?
பிரான்ஸ் நாட்டில் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூட பழக்கமாக இருந்த பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காண அதிகாலையிலிருந்தே மக்கள் தங்கள் குழந்தைகளோடு காத்திருந்ததை வரலாறு நமக்கு காட்டும். கைதிகள் துடிதுடித்து சாவதை பொது மக்கள் ரசித்திருக்கிறார்கள். அதே பிரான்ஸ் நாட்டில் இன்றைக்கு மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் பிரெஞ்சு தேசத்து மக்களின் சமூக மனசாட்சி எப்படிப்பட்டது? அது கொஞ்சம் கொஞ்சமாக அறப்பண்புகளை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது. கடந்த வருடம் அகதி இளைஞர்கள் இருவர் போலீசாரால் துன்புறுத்தப்பட்ட போது பாரீஸ் நகரமே பற்றி எரிந்தது. அநீதிக்கு எதிரான கோபம் அது. ஆனால் நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 6004 விசாரணைக் கைதிகள் காவல் நிலைய லாக்கப்புகளில் மரணமடைந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. சித்திரவதைக்குட்பட்டு படுகாயம் அடைந்தவர்களும், காயமடைந்தவர்களும் எத்தனை லட்சங்களோ?
இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக ராஜபட்சேவும், ஜார்ஜ்புஷ்சும், ஓபாமாவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தின் படிகளை அவர்கள் கட்டாயம் மிதிக்க வேண்டும்.
எனக்கு ஒரு ஏக்கம் உண்டு!
கேரளத்தின் நக்ஸலைட் தலைவர் வர்க்கீஸ் சுட்டுக்கொல்லப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்தபின் ராமச்சந்திரன் நாயர் மூலம் லெட்சுமணன் என்ற காவல் உயரதிகாரிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததுபோல, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நடக்கும் என்கெளன்டர் வர்க்கீஸ்களுக்கு ராமச்சந்திரன் நாயர்கள் கிடைக்க வேண்டும். பல லெட்சுமணன்கள் நீதிக்கூண்டேற வேண்டும்.
நீதியின் தடம் பதியாத இடமேது? காலமேது?
No comments:
Post a Comment