Saturday, December 11, 2010

நாளந்தா – பெருமைமிகு எதிர்காலத்திற்காக - சீத்தாராம் யெச்சூரி

நாளந்தா பல்கலைக்கழக மசோதா 2010 குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. )
ஒரு சர்வதேசத் திட்டமாக இத்தகைய பல்கலைக் கழகம் அமைக்கப்படுவதற் கான வாய்ப்புகள் என்னை உற்சாகமடையச் செய்திருக் கின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற சர்வதேச சிந்தனையாளர்கள். தத்துவஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள், இன்னிதரர்களைக் கொண்டு 16 நாடுகள் சேர்ந்து இந்தப் பல்கலைக் கழகத்தை அமைக்கவிருக்கின் றன. வரலாற்றின் கடந்த காலக் கணக்குகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல், ஒரு காலத்தில் பெருமைமிகு சிறப்பாக இருந்த நாளந்தாவின் பெருமைக்குப் புத்துயிரூட்டப்படு கின்றது என்கிற வகையில் நான் உற்சாகமடைந் திருக்கின்றேன். அதற்கு புத்துயிரூட்டுவது மிகவும் முக்கியம். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ஆனால், அவரும் இவரும் இந்தத் தவறைச் செய்தார்கள், ஆதலால், வரலாற்றின் அந்தத் தவறு களை நான் சரி செய்கிறேன் என்கிற வகையில் அல்ல. எதிர்கால நம்பிக்கை கள் என்னை உற்சாகமடையச் செய்திருக் கின்றன என்று நான் நினைக்கிறேன்.
நமது கடந்த காலத்தில் என்ன பங்களித் தோமோ அவை எதிர்காலத்திற்கு முன் னெடுத்துச் செல்லப்பட வேண்டியவை. அதற்கான சாத்தியங்கள் இருப்பது என்னை உற்சாகமடையச் செய்திருக்கின்றது. பக்தியார் கில்ஜியின் படைகள் பற்றியும், அவை நாளந்தாவின் கலை இலக்கியச் செல்வங்களை அழித்தது பற்றியும் டாக்டர் கரன்சிங் மிகச் சரியாகவே குறிப்பிட்டார். அது வரலாறு. ஹன்ஸ் என்றழைக்கப்பட்ட காட்டுமிராண்டித் தனமான நாடோடிகளும், பழங்குடியினரும் மாபெரும் ரோமப் பேரரசை அழித்தனர். ஆனால், இந்த வரலாற்றுத் தவறுகள் எல்லாம் ஒரு பல்கலைக் கழகத்தை அமைப்பதன் மூலம் சரி செய்யப்படக் கூடியவை அல்ல. அல்லது அதைப் போல கிபி 7ம் நுhற்றாண்டுக்குப் பின்னர் பவுத்தம் ஏன் இந்தியாவின் எல்லைகளுக்கு வெளியே மட்டும் தழைத்தோங்குகின்றது என்று நம்மை வாட்டும் கேள்விக்கும் அது பதிலாக முடியாது.
இந்தியாவின் எல்லைக்குள் மக்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குகைகளில் மட்டுமே பவுத்தக் கலாச்சாரம் காணப் படுகின்றது. அவர்களின் கலை இலக் கியம் அனைத்தும் ஏன் குகைகளில் தலை மறைவாக இருக்கின்றன. இவை வரலாற்றுப் பிரச்சனைகள். இந்தப் பல்கலைக் கழகத்தின் செயல்திட்ட மல்ல. என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தவரையில், நாடு விடுதலை அடைந்த போது நேரு தன்னுடைய ‘நான் கண்ட இந்தியா’ நுhலில் கூறியதுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் செயல் திட்டம். இதை மனப்பூர்வமாக பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவர் இந்தியாவை எவ்விதம் விவரித்தார்? கை யெழுத்துப்பிரதியை அழித்துவிட்டு அதன் மீது புதிதாக எழுதுதல் எனும் மிகச் சிறந்த உதாரணத்தை ஜவகர்லால் நேரு உதவிக்கழைக் கின்றார்.
கையெழுத்துப் பிரதியை அழித்து விட்டு புதிதாக எழுதுதல் என்றால் என்ன? காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் பண்டை காலத்தில் கற்பலகையிலோ அல்லது மரப்பலகை யிலோ எழுதப்பட்டிருக்கும் கடந்த கால வர லாற்றை வெற்றி பெறும் ஒவ்வொரு மன்னரும் அழித்துவிட்டு, தனக்குகந்த வரலாற்றை எழுது வார்கள். ஆனால், நான் கண்ட இந்தியா நூலில் நேரு கூறியபடி ‘அடுக்கின் மேல் அடுக்காக சிந்தனைகளும், தவறான நம்பிக்கைகளும் எழுதப் பட்ட பண்டைக் கால கையெழுத்துப் பிரதி இந்தியா. எனினும், எந்த அடுக்கினாலும் அதற்கு முன்னர் எழுதப்பட்டதை முற்றிலும் மறைக்கவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை. ’
தொடர்ச்சியுடன் கூடிய ஒரு மாற்றம் மனித நாகரீகம் கொட்டிக் கடையப்படும் மட்கலம் நம் நாடு. நமது மண் அதைத்தான் குறித்தது. பல்வேறு போக்குகள் வந்துள்ளன. நாம் அவற்றை உள்வாங்கிக் கொண்டோம். அந்த அடிப்படையில்                 நாம் முன்னேறியுள்ளோம். இன்று, பிபிசி தொலைக்காட்சி, தன்னுடைய ‘எபிக் ஹிஸ்டரி’ எனும் தொடரில், மனித நாகரீக வரலாற்றில் இந்திய நாகரீகம்தான் உலகிலேயே தொடர்ச்சி யான ஒரு நாகரீகம் என்று வர்ணிக்கின்றது. கிபி1002ம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டப் பட்ட தஞ்சை கோவில் பற்றி டாக்டர் கரன்சிங் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் விடியும்போது கடந்த 1008 ஆண்டுகளாக ஒரே மாதிரியான சுலோகங்கள் வாசிக்கப்பட்டுதான் கோவில் திறக்கப்படுகின்றது. அந்தத் தொடர்ச்சியுடன் மாற்றமும் இருக்கின்றது. நாளந்தா அதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு, கிமு 6ம் நுhற்றாண்டிலிருந்து கிபி 6ம் நூற்றாண்டு வரை, (பவுத்தம் உச்சத்தில் இருந்த காலம்) 800க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாளந்தா உலக அறிவுச் செல்வத்தின் களஞ்சியமாக இருந்தது. புதிய கருத்துக்களின் வருகை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.
யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, அது அறிவுக் கோவிலாக மட்டும் இருக்கவில்லை. சகிப்புத் தன்மையின் கோபுரக் கலசமாக அது இருந்தது. மதச் சகிப்புத்தன்மை. இன்று நாம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. எனவே, இன்று நாளந்தா பல்கலைக்கழகத்தை மறுபடியும் துவக்குவதில் நாம் எதிர்காலத்தை பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்த இடத்தில்தான் சகிப்புத்தன்மைப் பிரச்சனை முற்றிலும் முக்கிய மானது.
அந்தப் பெருமையை மீட்டெடுப் பதற்காக அல்ல: ஆம், அது பெருமைதான். ‘அங்கோர் வாட்’ ஒரு பெருமைமிகு உதாரணம். (அங்கோர் வாட்: தற்போது கம்போடியாவிலுள்ள உலகின் மிகப் பெரும் கோவில். 1550 மீட்டர் நீளமும், 1400 மீட்டர் அகலமும் கொண்டது. மொ-ர்). ஆனால், இந்தப் பெருமைகள் ஒரு ஞானத்தின் அடிப்படை யில் வந்தவை. இந்த காலகட்டத்தில்தான் நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம். அந்த ஆயிரம் ஆண்டுகள் அதிகபட்ச அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட ஆண்டு. கிபி7ம் நுhற்றாண்டுக்குப் பின்னர் அது ஏன் நின்றுபோனது என்பது தனிக்கதை.
நாம் ஏன் முன்னேறவில்லை? ஞானத்தின் மையம் ஏன் மேற்குலகிற்குச் சென்றது? இவை சகிப்புத்தன்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். அவை பல்கலைக்கழகத்தின் பணியில் குறுக்கிடக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சார்லஸ் செய்பி என்கிற பிரெஞ்சு அறிவுஜீவி எழுதிய வசீகரமான நுhல் ஒன்று இருக்கின்றது. ‘ஆபத்தான இந்தியாவின் வாழ்க்கை வரலாறு’.
அந்த ஆபத்தான கருத்து பூஜ்யம். அராபியர் கள் அதை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டார் கள். உலகத்திற்கு அது அராபிய எண்கள் என்றே தெரிய வந்தது. ஆனால், அராபியர்கள் எப் போதுமே அதைக் கண்டுபிடித்த பெருமையை நமக்குத்தான் அளிப்பார்கள். சரி, அது ஏன் ஆபத் தானதாக ஆனது?
இன்று நீங்கள் ஒன்றுமற்றதைப் பற்றி எண்ணிப் பார்க்க முடியுமா? மனித நாகரீகத்தின் அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், ஒன்றுமற்றது என ஒன்று இருந்தது என்று எண்ணிப் பார்ப்பதே சாத்தியமற்றதாக இருந்தது. அதன் சரிநேரெதிர் என்ன? எல்லையற்றது என்கிற கருத்து இல்லாமல், இன்றும்கூட கணிதத்தில் பூஜ்யத்தைக் கருதிப் பார்க்க முடியாது. எல்லையற்றதும் பூஜ்யமும் ஒன்றுடன் ஒன்று சோந்தே இருக்கின்றன. இயக்கவியல் கூறுவதுபோல், எதிரிடை களின் ஒற்றுமை. அதுதான் உண்மை. நாளந்தா எனும் அடித்தளத்திலிருந்து செய்யப்பட்ட அத்தகைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே நாம் நமது எதிர்கால நாகரீகத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
ஆதலால், வரலாற்றின் கணக்குகளைத் தீர்ப்பதற்கானதாக இந்த பல்கலைக்கழகத்தை தாழ்த்தி விடாதீர்கள் என்பது எனது வேண்டுகோள். கடந்தகாலப் பெருமை என்று அழைக்கப்படுவதை மீட்டெடுப்பதற்கானதாக இந்த பல்கலைக் கழகத்தை நாம் தாழ்த்திவிட வேண்டாம். நாம் எதிர்காலப் பெருமையைக் கட்டமைப்போம். எதிர்காலப் பெருமையைக் கட்டமைப்பதைத்தான் நாளந்தா குறிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நாம் இங்கு எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவது மிக முக்கியமானதாக ஆகின்றது. நான் இதைப் பற்றிக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், பக்தியார் கில்ஜிதான் நாளந்தாவை அழித்தது. பீகாரின் தற்போதைய முதலமைச்சர் பக்தியார்பூரில் பிறந்தவர் என்பது முரண்சுவை.
அவர்தான் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான மசோதாவை முன்மொழி கின்றார். ஆக, வரலாறு தனக்கே உரித்தான வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றது. ஆகவே, நாம் வரலாற்றுக் கணக்குகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டாம். ஆனால், ஆராய்ச்சி என்று வருகின்ற போது இந்த மசோதாவில் சில நுட்ப மான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ‘அரசு சாராத, லாப நோக்கமற்ற, மதச்சார்பற்ற, சர்வதேச தன்னாட்சி நிறுவனத்தை’ என்று கூறப்படுகின்ற ஒரு பல்கலைக்கழகத்தை இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவுவது பற்றி நாம் பேசிக் கொண்டிருக் கின்றோம்.
கருத்துக்களின் சாகசம்
இந்திய அரசியல் சட்டம் இந்தப் பல்கலைக் கழகத்தை நிறுவுகின்றது என்பதுடன், இந்த மசோதா மேலும் பின்வருமாறு கூறுகின்றது. ‘இந்தப் பல்கலைக்கழகம் எப்படி நடத்தப்படு கின்றது என்பது குறித்து மற்ற நாடுகளுடன் நாம் மேலும் ஒப்பந்தங்கள் போட வேண்டியிருக் கின்றது. ’ இந்த நுட்பமான விஷயங்களைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தின் கருத்துருவாக்கமும், கண்ணோட்டமும்தான் உண்மையில் இன்று நம் அக்கறைக்குரியவை. மனித நாகரீகங்கள் கொட்டிக் கடையப்படும் மட்கலமான இந்திய நாகரீகத்தில் நாம் ஒரு கட்டத்தை வந்தடைந்துவிட்டோம் என்று நான் எண்ணுகின்றேன். உலகில் வேறு எங்கும் இல்லாத, எண்ணிப் பார்க்க முடியாத பல்வகை களும், வேற்றுமைகளும் கொண்டது இந்திய நாகரீகம். காஷ்மீரிய நாகரீகத்திலிருந்து திராவிட நாகரீகம் வரையிலும், டாக்டர் கரன்சிங் ராஜ்ஜிய மாக இருந்த பாரி மஹாலில் இருந்து திராவிட நாகரீகம் வரையிலும் பல்வகைகள் கொண்டது.
சுஃபியிசம் மற்றும் உபநிஷத்துகள் என்கிற இரண்டு மகாசமுத்திரங்களை ஒன்றுகலப்பது பற்றி உரையாடும் ‘மஜ்மா-உல்-பஹ்ரைன்’ என்கிற புகழ் பெற்ற ஒப்பந்தத்தை தாரா ஷிகோக் எழுதிய பாரி மஹால். மனித சிந்தனையையும், மனித நாகரீகத் தையும் உயர்ந்த மட்டங்களுக்கு உயர்த்தும் விளிம்பில் நாம் இருந்தோம். இருக்கின்றோம். அத்தகைய மட்டங்களையே இந்தப் பல்கலைக் கழகம் இலக்காகக் கொள்ள வேண்டும். மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல், முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு முன்னர் அனைத்து தத்துவார்த்த வேறுபாடுகளும் மதம் எனும் அரங்கில் தீர்க்கப் பட்டன. மதம்தான் அந்த அரங்கம். அதனால்தான் பூஜ்யம் கண்டுபிடிக்கப்பட்டபோது அதற்கு வலுசேர்க்கும் எல்லையற்றது என்பதும் தோன்றியது.
இந்த நாகரீகத்துடன் தோன்றிய அடையாளம் என்ன? சிவனின் ருத்ர தாண்டவம் உங்களிடம் இருக்கின்றது. பிரிட்ஜாப் கோப்ரா என்கிற இயற்பியல் அறிஞர் எழுதிய ‘தாவோ ஆப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் தாவோ-தாவோ என்பது இயற்கையின் நிகழ்வுகளில் தலையிடாத எளிமை யான வாழ்க்கையை போதிக்கும் ஒரு சீன தத்துவம். மொ-ர்) என்கிற நூல் சுவிட்சர்லாந்திலுள்ள சிஇஆர்என் சோதனைச் சாலையில் இன்று எழுதி வைத்துள்ளது. இன்று நாம் பொருள் என்று அறிந்திருப்பது உருவாக்கப்பட்ட, பேரண்டத்தின் முதல் மோதல் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள ஹார்டோன் கொலைடர் உண்மையில் அங்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். சிவனின் ருத்ர தாண்டவத்தை மேற்கோள் காட்டும் ‘இயற்பியலின் தாவோ’ இந்தச் சோதனைச் சாலையில் இருக்கின்றது. இன்று அந்த சோதனைச் சாலையின் முகப்பில் இந்தியா அன்பளிப்பாக அளித்த நடராஜர் சிலை நிற்கின்றது.
சிவனின் ருத்ர தாண்டவத்தை இன்று நீங்கள் எப்படிச் சித்தரிக்கின்றீர்கள்? சிவனின் ருத்ர தாண்டவத்தை நாம் எப்போதுமே ஒரு வட்ட மாகத்தான் சித்தரிப்போம். அது பூஜ்யத்தைக் குறிக்கின்றது. ருத்ரதாண்டவத்தின் எல்லையற்ற தன்மையையும், பொருள் உலகின் பூஜ்யத்தையும் பிரிக்க முடியாது. இயக்கவியல் பொருள்முதல் வாதம் கூறும் இந்த எதிரிடைகளின் ஒற்றுமைதான், கருத்துக்களின் சாகசத்தை உண்டாக்குகின்றது. இந்த கருத்துக்களின் சாகசத்தை நோக்கித்தான் நாம் முன்னேற வேண்டியிருக்கின்றது.
ஆகவே, மிக முக்கியமாக, மனித அறிவு மற்றும் நாகரீகம் ஆகியவற்றில் நாம் ஒரு உயாந்த மட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் இறுதிப் பத்தியை நினைத்துப் பாருங்கள். ‘தன்னுடைய மதத்திற்காக மற்றொரு வரின் மதத்தை அழிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள வர்களை நினைத்து என் மனதின் அடி ஆழத்திலிருந்து நான் பரிதாபப்படுகின்றேன். முக்கியமாக, அனைத்து மதங்களின் பதாகை களிலும் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: உள்வாங்கிக் கொள்ளுங்கள், அழிக்காதீர்கள்’.
நான் என் நினைவிலிருந்து கூறுகின்றேன். அரைப் புள்ளி, புள்ளி போன்ற சிறு பிழைகள் இருக்கலாம். அந்தத் தத்துவத்தைக் கொண்டுதான் நாம் முன்னேறியிருக்கின்றோம். இந்த நிலையை அடைந்திருக்கின்றோம். ஆதலால், இறுதி ஆய் வின்படி செய்ய வேண்டியது இதுதான். நான் மீண்டும் நேருவிடம் செல்கின்றேன். நாடு விடுதலை அடைந்த சில நாட்களில் அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். ஒரு பல்கலைக்கழகம் என்றால் என்ன என்று அவர் பின்வருமாறு கூறினார். ‘பல்கலைக்கழகம் என்றால் அது மனிதாபிமானத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும், பகுத்தறிவிற்கும், கருத்துக்களின் சாகசத்திற்கும், உண்மையைத் தேடுவதற்கும் அடையாளமாக இருக்க வேண்டும். இன்னும் உயர்ந்த இலக்கு களை நோக்கி மனிதகுலத்தின் பீடுநடைக்கு அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு பல்கலைக் கழகம் தன்னுடைய கடமைகளைப் போதுமான அளவு செய்தால், அது மக்களுக்கும் தேசத்துக்கும் நல்லது.
இந்த நாளந்தா பல்கலைக்கழகம் இந்த குறிக்கோள்களை ஈடேற்ற வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், இந்த மாண்புமிகு அவை, இந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான செயல் அமைப்பை சர்வதேச அளவில் நிறுவ வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். டாக்டர் அமர்த்தியா சென் தலைமையில் மிகச்சிறந்த நிபுணர்கள் இதன் இயக்கவிதிகளை வகுத்துக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இறுதியாக, பல்கலைக்கழகக் கட்டிடத்தின் கட்டமைப்பு பற்றிய டாக்டர் கரன்சிங் அவர்களின் கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இந்தப் பல்கலைக்கழகத்தின் அறிவுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் முயற்சியில் இந்த அவை முழுமை யும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்பு கின்றேன்.
இறுதியாக, அறிவுக் கட்டமைப்பே மிகவும் முக்கியமானது. அந்தக் குறிக்கோளுடன் இந்த முயற்சிக்கு நான் என்னுடைய ஆதரவைத் தெரிவிக்கின்றேன். மற்றும், நாகரீகத்தின் உயர்ந்த மட்டங்களுக்கு இந்தியாவை எடுத்துச் செல்லும் மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு முயற்சி என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment