புதுதில்லியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாடு நடந்து முடிந்திருக் கிறது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி யும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகழ்ந்து தள்ளிவிட்டனர். நாடாளுமன்றம் நடைபெறும் நேரங்களில் அயல்நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டிற்காக இந்தியாவில் தங்கி, மாநாட்டில் உரையாற்றி யதை சோனியா காந்தி பாராட்டாமல் விட்டது ஒரு சிறு குறைதான்.
சோனியா காந்தி தலைமையில் பணி யாற்றுவது பெரும் பாக்கியம் என்று மன் மோகன் சிங் உணர்ச்சிவசப்பட்டார். விட்டால் கண்ணீர் விட்டு கதறியிருப்பார். ஆனால் அடுத்த நிமிடமே சுதாரித்துக் கொண்டு, ஊழலை ஒழிப்பது குறித்த அணுகுமுறையை சோனியா காந்தி நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். அவருடைய தூய்மையான அரசியலை பின்பற்றி நாம் செயல்பட வேண்டும் என்று கூறினார் பிரதமர்.
அப்படி ஊழலை ஒழிக்க சோனியா காந்தி முதல்நாள் என்ன கூறினார் என்று பார்த்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஒரே போடாக போட்டதுதான் அன்னை சோனியா காட்டிய அற்புத வழி. அதாவது எதிர்க்கட்சிகள் என்ன தான் போராட்டம் நடத்தினாலும், நாடாளுமன் றத்தின் ஒரு கூட்டத்தொடரே நடக்காமல் முடங்கினாலும், தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஊடகங்கள் ஊழலின் புதிய புதிய பரிமாணங்களை அம்பலப்படுத் தினாலும் அசரக்கூடாது. ஊழலை மூடி மறைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் ‘தூய்மையான’ அரசியலுக்கு தலைவர் சோனியா காட்டிய வழி.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்சநீதிமன் றம் என்னதான் நேரடியாக கேள்வி கேட் டாலும், கண்டனம் தெரிவித்து கழுத்தை பிடித் தாலும் எதுவுமே நடக்காதது போல தூய்மை யான வழியை தொடரப் போவதாக மன்மோகன் சிங் மாநாட்டில் சத்தியம் செய்துவிட்டார்.
இந்துத்துவாவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியிருப்பது வரவேற்கத் தக்கதுதான். பயங்கரவாதிகள் என ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் முத்திரை குத்தக்கூடாது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எச் சரித்து வந்துள்ளன. மாலேகாவ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த விவாதம் முன்னுக்கு வந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் காங் கிரஸ் கட்சி முன்பின் முரணில்லாத அணுகு முறையை பின்பற்றி வந்துள்ளதா என்பதும் கேள்விக்குறியே. குறிப்பாக சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட “நம்பிக்கை” என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டம் கூச்சலிட்ட போது உறுதியான நிலையை காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை. மாறாக அவர்களை தாஜா செய்யும் வேலையில்தான் இன்றுவரை ஈடுபட்டு வருகிறது.
எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார். இவரது கட்சியைச் சேர்ந்த நரசிம்மராவ்தான் அப்போது பிரதமராக இருந் தார். அவருக்கு இந்த மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் பிரதமராக இருந்த காலங்களில் அயோத்தி பிரச்சனையில் பல்வேறு சமரச சறுக்கல்கள் நடந்துள்ளன. இதே ராகுல் கொஞ்ச காலம் கழித்து, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்காது அல்லது குறைந்தபட்சம் வெளியே வந்திருக்காது என்று கூட கூறக்கூடும்.
சோனியா காந்தி தன்னுடைய உரையில் ஊழலைக் களைய ஐந்து அம்சத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது அதில் முதல் அம்சமாகும்.
போபர்ஸ் ஊழல் வழக்கை எந்த அளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத் திய அரசுகள் விரைந்து விசாரித்தன என்பதே இதற்கு உதாரணம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கலாம். குவாத்ரோச்சி போன்ற ‘நிரபராதிகளை’ விடுவிக்க மத்திய புலனாய்வு அமைப்பை காங்கிரஸ் எந்த அளவுக்கு வளைத்தது என்பதையும் அவர் சேர்த்து குறிப் பிட்டிருந்தால், இப்போது ஆதர்ஷ், காமன் வெல்த் ஊழல்களில் சிக்கியுள்ள அசோக் சவாண், சுரேஷ் கல்மாடி போன்ற காங்கிரஸ் காரர்களுக்கு அது ஒரு நல்ல அனுபவப் பாடமாக இருந்திருக்கும்.
இயற்கை வளங்களை சுரண்டுவதை தடுக்க வெளிப்படையான நடைமுறை வேண்டும் என்பதும் சோனியா காந்தியின் யோசனை களில் ஒன்று. கோதாவரி நதி படுகையில் நாட்டுக்குச் சொந்தமான இயற்கை வளமான எரிவாயுவை யார் அமுக்குவது என்று அம் பானி சகோதரர்கள் அடித்துக்கொண்டபோது, பிரதமரே தலையிட்டு ஒற்றுமையாக இருந்து ஊரை கொள்ளை அடியுங்கள் என வழிகாட்டி னார். இதுதான் இயற்கை வளத்தை பாது காப்பதில் காங்கிரஸ் கட்சியின் அணுகு முறை. நாட்டுக்குச் சொந்தமான கனிமவளங் களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பந்தி வைப்பதும் இதே காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் என்பதையும் சோனியா காந்தி வசதியாக மறைக்க முயல்கிறார்.
இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மன் மோகன் சிங், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை போல பிரதமரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் . இதை கருத்தில் கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பொது கணக்குக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று ஆவேசப்பட்டுள்ளார்.
ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க 16மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு இதுவரை பிரதமர் தரப்பில் பதில் சொல்லப்படவில்லை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் ஒதுக்கீடு செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று பிரதமர் எழுதிய கடிதத்தை ஆ.ராசா நிராகரித்து அவசர அவசரமாக ஒதுக் கீடு செய்திருக்கிறார். இதையும் உச்சநீதிமன் றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கெல்லாம் பதி லளித்து சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக பிரதமர் தன்னை காட்டிக்கொள்ள முன்வர வில்லை.
பிரதமரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நாடாளு மன்ற கூட்டுக்குழு கோரவில்லை. மாறாக, அப்போதுதான் முழு உண்மையையும் வெளியே கொண்டுவர முடியும் என்பதற் காகவே அந்த கோரிக்கையை முன் வைக் கின்றன. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறும் பிரதமர் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கத் தயங்குவது ஏன்?
எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் இதை அரசியல் ஆக்குவதாக பிரதமர் கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, முழு உண்மையையும் எடுத்துக் கூறி, எதிர்க்கட்சி களின் அரசியலை முறியடிக்க பிரதமர் முன் வரலாமே? ஏன் தயங்குகிறார். அரசின் கஜானாவுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி சம்பந்தப்பட்ட பிரச்சனையை தன்னுடைய சொந்த கவுரவப் பிரச்சனை போல மாற்ற முயலுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயல் கிறார் மன்மோகன் சிங்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி- 2 அமைச் சரவை உருவாக்கத்தின்போது நீரா ராடியா இந்தியாவின் பெரு முதலாளிகளான டாடா, அம்பானி போன்றவர்களோடு நடத்தியுள்ள உரையாடல்கள் நாட்டின் இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. யார் அமைச்சராக வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதையெல்லாம் முதலாளிகளே தீர்மானித் திருக்கிறார்கள். அவர்கள் நடத்திய உரை யாடலின்படியே காரியங்கள் கனகச்சிதமாக நடந்து முடிந்துள்ளன. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறும் பிரதமர் இதற்கெல் லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்.
இன்றைக்கு நாட்டு மக்களின் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது விலைவாசி உயர்வு. இதை குறைப்பது குறித்து காங்கிரஸ் மாநாடு எந்த உருப்படியான விவாதத்தையும் நடத்தவில்லை. மாறாக மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் வழக்கம் போல கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கவலையை வைத்து உலை வைக்க முடியாது. விலைவாசியை கட்டுப் படுத்த வேண்டும் என்று அரசை மாநாடு கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் சேர்ந்து கைதட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மோசடி வர்த்தக முறையான முன்பேர வர்த்தகம். இதை தடைசெய்ய வேண்டுமென மாநாடு கோர வில்லை. மாறாக அன்னிய முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணே தனியார்மயப் பாதைதான் என்பதைதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தாராளமய-தனியார்மய-உலகமய பாதையில் தொடர்ந்து செல்லும் என்பதையே இந்த மாநாடும் உறுதிசெய்துள்ளது. மரணப் பாதையான இந்தப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் காங்கிரஸ் கட்சியால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. மொத்தத்தில் திண்டில் சாய்ந்துகொண்டு அரை தூக்கத்தில் தீர்மானம் போட்டார்கள் என்பதைத்தவிர இந்த மாநாட் டால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.
No comments:
Post a Comment