Wednesday, January 26, 2011

நந்தன் புகுந்த பாதை ! - (வரலாறு தொடரலாமா?)



சைவ மரபில் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பல கோவில்கள் தமிழகத்தில் இருப்பினும் இருப்பினும் சிதம்பரம் நடராசர் ஆலயம் மட்டுமே கோயில் என்று குறிக்கப்படுகிறது. அதாவது கோயில் என்றால் அது நடராசர் அலயம்தான். இந்த கோயில் குறித்த பல விவாதங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆலையத்தினுள் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதிகோரி தமிழ் அன்பர்கள் இராம.ஆதிமூலம் உள்ளிட்டோர் துவக்கிய நாற்பது ஆண்டுகளுக்கு மேலான பொராட்டம் வெற்றி அடைந்த சூழலில் அந்த ஆலயத்தை அரசாங்கம் இந்து அறநிலையதுறையின் கீழ் எடுத்துள்ளது. எடுத்தது வழக்காக நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது அந்த ஆலையத்தின் தெற்குரத வீதியின் கோபுரத்திற்கு நேராக உள்ள கதவு கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு நடைபெற காரணம் அவ்வழியாக நந்தனார் என்ற தலித் பகதன் வந்ததே, எனவே அந்த பாதையை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொருபுறம் இந்த கோவிலின் தற்போதைய அமைப்பே 12 ஆம் நூற்றாண்டில் வந்ததுதான் அப்போது இந்த சுவரே கிடையாது பின்பு நான்காம் நூற்றாண்டில் நந்தன் எப்படி அவ்வழி வந்திருக்க முடியும் என்கின்றனர். சுவர் வேண்டுமானால் பின்பு வந்திருக்கலாம் தெற்குதிசை மாற்றம் அடைந்திருக்காது அல்லவா? ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் சிதம்பரம் பகுதியை சுற்றி உள்ள உழைப்பாளி மக்களின் உதிரத்தில் உதித்த இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழைமையானது என்றாலும். 1947 க்கு பிறகுதான் இந்த ஆலையத்தினுள் தலித் மக்கள் நுழைய முடிந்தது. 1932 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆலயநுழைவு அறைகூவலை எற்று சுவாமி சகஜானந்தா தலைமையில் சிதம்பரம் ஆலையநுழைவு போராட்டம் நடந்த போது மேலரதவீதியில் கடுமையாக தாக்கப்படுகின்றனர். அதன் பின் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்புதான் அங்கு அவரது தலைமையில் அந்த பொராட்டம் வெற்றி அடைந்தது. 

    காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் சதுப்பு நிலங்கள் நிறைந்த தெற்குபகுதியில் அமைந்துள்ள நகரம் சிதம்பரம். சிதம்பரம் நகராட்சி தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பழைமை வாய்ந்த நகராட்சியாகும். 33 வார்டுகளும், கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் தொகையும் கொண்ட சிதம்பரம் நகராட்சி 1873 ஆண்டு அமைக்கப்பட்டத்தாகும். ஒருகாலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த காட்டுபகுதியாக இருந்த இடம் இது. புலிகள் அதிகம் இந்த காடுகளில் வசித்ததால் இந்த பகுதி பெரும்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாய வடிவமாக இத்தலம் திகழ்வதால் ஞான ஆகாசம் என்றும் கூறப்படுகிறது. இவாகாசம் பூத ஆகாசம் போல் சடம் ஆகாது. சித்தாகவிலங்குவதால் சித் + அம்பரம் = சிதம்பரம் எனும் பெயர் பெற்றது. மற்றும் புண்டரீகபுரம், தளியூர் என்ற சிறப்பு பெயர்களும் உள்ளது. மக்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை கடவுள் சக்தி என்று நம்பிய அன்றைய மக்கள் அந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் கடவுள் வந்திருப்பதாக நம்பினர். அந்த இடத்தில் குடிசை அமைத்து வனங்கினர். குடி இருத்தல் என்றால் தெய்வம் தங்கி இருக்கும் இடம் என்று அர்த்தம். கோயில், கோட்டம், மன்றம் என்பவையெல்லாம் பிற்கால பெயர்கள். குடியென்பதே பழம் பெயர். தொல் திராவிட மொழியில் கோயில் குடி என்றே உள்ளது. இன்றும் கன்னடத்திலும், தெலுங்கிலும் கோயிலை குடியென்றே அழைக்கின்றனர். குடியின் மீது ஓலையால் வேயப்பட்ட இடத்தை குடிசை என்றழைத்தனர். இன்றும் பழமை மாறாமல் குடிசை வடிவிலேயே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் எனும் மைய மண்டபம் உள்ளது. கோயிலின் கூரையில் பொன்வேய்ந்து பிற்காலத்தில் எத்துனையோ மாற்றங்கள் வந்த பின்பும் பொன்னம்பலத்தின் குடிசை அமைப்பு மட்டும் மாறவே இல்லை. சிதம்பரம் கோவிலின் தொன்மைக்கு இது சான்றாக நிற்கிறது.

    தொன்மைவாய்த கோயில் என்றாலும் இக்கோயில் குறித்து சங்க இலக்கியங்களில் எந்த குறிப்பும் காநப்படவில்லை. சோழ வம்சத்தின் கடைசி மன்னனாக கருதப்படும் கோச்செங்கட் சோழன் பிறப்பதற்காக வேண்டி அவனது தாய் தந்தையர் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டதாகவும், கோச்செங்கட் சோழன் சிதம்பரம் கோவிலை செப்பனிட்டதகவும், நகரைச் சீர்திருத்தி அமைத்தாகவும் பெரியபுராண செய்திகள் உள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. பின் 5 ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரத்தில் இக்கோயில் குறித்த குறிப்புகள் உள்ளது. கி.பி 6 ஆம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டுள்ள செய்தி இருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவும் கோயிலுக்கு வந்துள்ளனர். 7 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு இக்கோவிலின் வரலாறு முழுமையாக கிடைக்கிறது. இது ஒரு புறம் இருக்க நந்தனார் பிரச்சனையையும் காலகாலமாய் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அதன் பிறகு கோயில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. 

     கிழக்குக் கோபுரம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1138-1150), பின்பு காடவர் கோன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் முடிக்கப்பட்டது. தெற்குக்கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி 1237-40 காலத்தில் கட்டப்பட்டது. மேற்குக்கோபுரம் எழுநிலையுடன் முதல் ஜடவர்ம பாண்டியனால் கி.பி 1207 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரம் எழுநிலையுடன் தனது ஒரிசா போர்களத்தின் வெற்றியின் நினைவாக விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனால் கட்டப்பட்டது. சோழர்கள், பாண்டிய மன்னன், என பலரும் இந்த கோவிலை விரிவாகம் செய்து 12 ஆம் நுற்றாண்டில் தற்போது உள்ள நிலைக்கு ஆலையம் வந்தது.
     "புண்பலை நோய் தீண்டப்பெற்ற புறத்திருதொண்டன் நந்தன்" என 8 ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், "செம்மையே திருநாளைப் போவதற்கும் அடியேன்" என்று 12 ஆம் நுற்றாண்டில் பெரியபுராணம் என்கிற திருத்தொன்டர் புராணத்தில் சேக்கிழாரும், 1861 இல் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கோபாலகிருஷ்ன பாரதியும் நந்தன் குறித்து பேசி உள்ளனர். இந்த இலக்கியங்களில் நந்தன் சிவனை வழிபட வந்து  நந்தன் சாம்பலானான் என்கிறது. பெரியபுராணம் நந்தன் சிதம்பரத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஓமகுளத்தில் (ஹோம குளம்) நெருப்பில் இறங்கி பிராமணனாக மாறி சிவனடி சேர்ந்தார் என்று கூறுகிறது. கோபாலகிருஷ்ன பாரதி நந்தன் தெற்குவாயில் வழியாக ஆலையத்தினுள் நுழைந்தான் அதனால் மடிந்தான் என்று கூறுகிறார். இந்த பழம் பெரும் சான்றாதரங்களை வைத்துதான் அந்த ஆலையத்தின் தெற்கு வாயில் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனல் நந்தன் இவ்வழியே வரவில்லை என்றும் பல கதைகள் உள்ளது.
    கதை 1: கி.பி 1798 இல் தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் தொகுக்கப்பட்ட சுவடிகள் (தமிழக அரசின் கீழ்திசைச் சுவடிகள் நூலகம் சார்பில் பதிப்பிக்கபட்டுள்ள இடங்கை வலங்கையர் வரலாறு என்று நூலாக வெளிவந்துள்ளது) நந்தன் குறித்து கூறும் கதை வேறு விதமானது. இராவணனின் வாரிசுகளில் ஒருவராகச்சொல்லப்படும் தியாகச்சாம்பானுடைய மகளுக்கும் சோழராசாவுக்கும் பிறந்த நந்தன் ஒரு சோழமண்டல அரசன். தியாகச்சாம்பான் ஒரு தலித் என்பதால் நந்தனும் அப்படியே அறியப்பட்டடான். நந்தனுக்கு ஒரு வெள்ளாள சாதியை சார்ந்த பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால் பிரச்சனை துவங்கியது. தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு தங்களது பெண்ணை திருமணம் முடிக்க ஆதிக்கசாதியினர் தயாரில்லை. ஆனால் அதிகாரத்தில் உள்ள நந்தனை எதிர்க்கவும் துணிவில்லை. எனவே பெண் பார்க்க நந்தனை தனது சாதி சனத்துடன் வரச்சொல்லி, கம்மாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கொலைசெய்ய தூண்டுகின்றனர். அப்படியே பெண்பார்க்க வந்த நந்தனையும் அவனது சுற்றத்தாரையும் கம்மாளர்கள் உதவியுடன் வெள்ளாளர்கள் பந்தலில் சூட்சுமம் செய்து படுகொலை செய்கின்றனர்.
    கதை 2: 1910 ஆம் ஆண்டில் அயோத்திதாச பண்டிதர் தமிழன் ஏட்டில் "இந்திரர் தேச சரித்திரத்தில்" என்ற தொடரில் நந்தன் குறித்து வேறு விதமாக எழுதியுள்ளார். புன நாட்டின் வடக்கே வாதவூரெனும் தேசத்தை அரசாண்ட விவேகம் மிக்க மன்னன் நத்தன். இவன் பவுத்த நெறி நின்று அரசாண்ட மன்னன். இவனது நாட்டிற்கு பக்கத்தில் உள்ள சோணா நாட்டில் வேஷபிராமணர்கள் ஒரு சிவாலயத்தை கட்டி மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றி வந்தனர். நந்தனின் புகழை அறிந்து அவனை ஏமாற்ற புத்ததுறவிகள் போல வேடமிட்டு நந்தனை கான வந்தனர். ஆனால் அவர்கள் பொய்வேடம் கலைந்து நாட்டைவிட்டு விரட்டப்படுகின்றனர். அப்படி ஓடியவர்கள் தங்கள் அவமாணம் வெளியே தெரிந்தால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சினர். நந்தன் அரணமனைக்கு மேற்கே அரைக்காத தூரத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் மண்மெட்டை தோண்டி அதன் மத்தியில் கல்லால் ஆன தூண்களை வைத்து பழைய கட்டடம் உள்ளதுபோல அமைப்பை ஏற்படுத்தி அதன் மத்தியில் காலை வைத்தால் விழும் அடிப்படையில் சூழ்ச்சி செய்து மன்னனை அழைத்து பார்வை இடச்சொல்கின்றனர். அப்படி சென்ற நந்தன் அந்த சூழ்ச்சியில் சிக்கி கொலைசெய்யப்படுகிறான்.
    கதை 3: (நந்தி கலம்பகம்) ஒரு ராசா இருந்தார். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலமாக ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அந்த ராசாவுக்கு ஒரு வைப்பாட்டி இருந்தாள். அவள் மூலம் பிறந்த ஆண் பிள்ளைதான் நந்தி. அந்த ராசா தன்னுடைய வைப்பாட்டி மகனான நந்திக்கு முடிசூட்டினான். அவன் மன்னனான சிறிது காலத்திற்கு பிறகு தந்தை இறந்தான். பின் நந்திராசா அந்த முதல் தாயையும் ஏழு பிள்ளைகளையும் கொடுமைசெய்தான். அதனால் அவர்கள் திருடி பிழைக்க முடிவு செய்தனர். நந்தியின் அரணமனையிலேயே திருட்டை துவக்கினர். திருடச்சென்ற முதல் ஆறுபேரையும் நந்தி தலையை வெட்டிக்கொன்றான். ஏழாம் பிள்ளை தப்பிசென்று ஒரு கவிராயனிடம் சேர்ந்தான். அவனிடம் வித்தைகளை கற்றுக்க்கொண்டு     நந்தி கலம்பகம் என்ற 100 பாடல்களை இயற்றினான். இது நந்தியை புகழ்வது போல இருப்பினும் இந்த பாடல்களை கேட்டு முடிக்கும் போது நந்தி மரணமடைவான். அப்படியே நடந்தது.
     காலத்தால் மிகவும் பின்பு உருவாக்கப்பட்ட இந்த மூன்று கதைகளில் நந்தன் கூலி தொழிலாளி இல்லை மன்னன் என்கிறது. நந்தன் குறித்து இன்னும் கதைகள் இருக்கக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது அயோத்திதாசர் பௌத்த மதத்தை முன்வைத்து ஒரு கதையாடலை கட்டமைக்கின்றார். அது பிராமணர்கள் பௌத்த சமண கோயில்களை இடித்து, சமணர்களை கழுவிலேற்றி படுகொலை செய்து இந்து மதத்தை ஆட்சியதிகார வன்முறையால் நிறுவியதற்கு எதிரான புரட்சிகர கதையாடல். ஆனால் அந்த கதைகான வரலாற்று சான்றுகள் எதுவுமில்லை. அடுத்து தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் எழுதப்பட்ட சுவடிகளில் சிதம்பரத்தில் நடந்த நன்தன் கதை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை, நந்தி கலம்பகமும் சிதம்பரம் பக்கம் நடந்ததா என்பதும் ஐய்யமுடையதே. ஆக நந்தன் ஆலயமே நுழையாத போது இந்த ஆலய சுவர் இடிப்பு ஏன் என்ற கேள்விக்கு இடம் வைக்கும் இந்த கதைகளின் நோக்கம் இன்னும் ஆராயப்பட வேண்டியது.
    மேலும் ஒரு கதை 4: (எங்கள் கள ஆய்வின் போது வாய்மொழி தரவாக கிடைத்தது) நந்தன் புலைச்சேரியில் பிறக்கவில்லை. சேரியில் கீழே திடீரென கிடந்த குழந்தை. கிடந்தவனை தலித் தம்பதியினர் எடுத்து வளர்கின்றனர். நந்தன் வேறு யாருமல்ல, சிவபெருமானே அப்படி குழந்தையாக கிடந்தார். பின்பு ஓமகுளத்தருகே நெருப்பில் இறங்கி பிராமன வேடம் புண்டு ஆலயம் சென்று செரூபமாகினார். இந்த கடைசி கதை அவன் மன்னனும் அல்ல மனிதனும் அல்ல சிவனே நந்தனாக பிறந்தான் என்கிறது. இருப்பினும் சிவனே தலித்தாக வளர்ந்தாலும் பிராணர்களை எதிர்த்து ஆலயம் நுழைய தீயில் இறங்க வேண்டியுள்ளது.
    நிகழ்காலத்தில் எழுந்துள்ள ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியுடன் இணைந்த கேள்வி மிகவும் முக்கியமானது. தெற்குவீதியில் உள்ள வாயில் அடைக்கப்பட காரணம் தீண்டாமைதான் என்று கோரிக்கை எழும்போது அது இல்லை எனில் வேறு எந்த காரணத்திற்க்காக அந்த பாதை முடப்பட்டுள்ளது என்பதை மூடியவர்கள் சொல்லவேண்டும். ஆலயங்கள் தெய்வங்கள் இருப்பிடம் எனில் அந்த ஆலயம் அனைவரையும் அரவணைப்பதாக இருந்திட வேண்டும். ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தலித் மக்கள் உள்ளே செல்ல கடுமையாக போராடவேண்டி உள்ளது. சமூகத்தின் பொதுவெளியில் எழுந்துள்ள கேள்விகளை அத்துனை எளிதாக யாரும் புறக்கணிக்க முடியாது...


எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

No comments:

Post a Comment