தோழர் நாவலன்
உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் ஜெ.நாவலன் புதன்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் கள்ளச் சாராய ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று பேரளம் திருமெய்ச்சுர் கிராமத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட தோழர் நாவலனின் உடல் வியாழக்கிழமையன்று காலை திருவாரூர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்போடு கட்சி ஊழியர்கள் பின் தொடர திருமெய்ச்சுர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்ட உடல் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக பொதுத்திடலில் வைக்கப்பட்டது. நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மறைந்த தங்களின் அன்பு தலைவனுக்கு வீர அஞ்சலி செலுத்தினர்.திருமெய்ச்சுர் கிராமத்தில் தோழர் நாவலன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அணி வகுத்த மக்கள் கூட்டம்
காவல்துறை தடியடி
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரகணக்கில் மக்கள் திரண்டதை கண்டு மிரண்டுபோன காவல்துறை மக்களை தடியடி மூலமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும். துப்பாக்கி சூடு நடத்தியும் கலைத்தனர்.
இந்த நடவடிக்கைக்கு கட்சியினரும் பேரெழுச்சியாக திரண்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் போலீசார் பின் வாங்கினர். திருச்சி மண்டல ஐ.ஜி கரண்சிங்கா திருச்சி சரக டி.ஐ.ஜி. திருஞானம் நாகை எஸ்.பி.சந்தோஷ்குமார் தஞ்சாவூர் எஸ்.பி. செந்தில்வேலன் உட்பட ஆயிரக்கணக்கான அதிரடிப்படை மற்றும் காவல் துறையினர் பேரளம் திருமெய்ச்சுர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
படுகொலை சம்பவம் நடந்த புதன்கிழமையன்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நன்னிலம் வட்டத்தில் நன்னிலம். பேரளம் சன்னாநல்லுர் கொல்லுமாங்குடி ஆண்டிபந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரங்கல் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.திருமெய்ச்சுர் கிராமத்தில் தோழர் நாவலன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அணி வகுத்த மக்கள் கூட்டம்
மனைவி புகார்
மறைந்த தோழர் ஜெ.நாவலனின் மனைவி என்.வசந்தா தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக போரட்டங்களுக்கு தலைமையேற்றதால் கள்ளச்சாரய ரவுடிகளினால் தனது கணவருக்கு அச்சுறுத்தல் இருந்தது.
அதனால் எனது கணவரை தண்டத்தோப்பு பகுதியில் கள்ளச் சாராய தொழிலை நடத்திவரும் நாராயணன் மகன் பன்னீர் செல்வம் துண்டுதலின் பேரில்
1.பன்னீர் செல்வம் மகன் காளீஸ்வரன்.
2.கோவிந்தன் மகன் பிரகாஷ்.
3.பன்னீர செல்வம் மகன் ஜீவா.
4.நாராயணன் மகன் ராமன்.
5.சுகுமாரன் மகன் பச்சைபிள்ளை.
6.நாரயணன் மகன் பரதன்
ஆகிய ஆறு பேரும் பேரளம் காவல் சரகம் கொட்டூர மாங்குடி பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.
எனவே. எனது கணவரின் படுகொலைக்கு நியாயம் கிடைத்திட கொலையாளிகளை கைது செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்ற வியாழக்கிழமையன்று மாலை பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் கோவிந்தன் மகன் பிரகாஷ். நாராயணன் மகன் ராமன் ஆகிய இருவரும் மானமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த படுகொலை சம்பவமே உதாரணம். திமுகவில் இதுபோன்ற ரவுடிகளின் ஆதிக்கமும் வன்முறை கலாச்சாரமும் பெருகி வருகிறது. திமுகவின் தலைவராகவும் தமிழக அரசின் காவல்துறைக்கும் பொறுப்பாகவும் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதி இந்த கொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இரங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு பல்லாயிரக் கணக்கானோர் அணிவகுக்க மக்கள் தலைவர் தோழர் நாவலனின் சொந்த ஊரான திருமெய்ச்சுரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.



No comments:
Post a Comment