வரிபாக்கி வைத்திருப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - நிதியமைச்சர் ப.சிதம்பரம்
இந்தியாவின் வரிபாக்கி 2 ,45,365 கோடி வசூலிக்க முடியவில்லை - நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம்
கடந்த 10 ஆண்டுகளில் ஒருலட்சத்து அறுபதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டது உண்மைதான் - மத்திய மந்திரி சரத் பவார்
ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் தத்தளிக்கும் மக்கள் எண்ணிக்கை நமது நாட்டில் என்பது கோடி - காங்கிரஸ் எம்.பி அர்ஜூன் சென் குப்தா
நமது நாட்டு தொலைபேசி துறையில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி உல் நடந்துள்ளது - மத்திய தணிக்கை துறை
எனக்கு தகவல் தெரியாது - பாரத பிரதமர்
பிரதமர் நேரடி கட்டுபாட்டில் உள்ள மத்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு லட்சம் கோடி ஊழல் - மத்திய தணிக்கை அதிகாரி
இல்லை ... ஆமாம் ... விசாரிக்கப்படும் - பாரத பிரதமர்
நமது ஆட்சியாளர்களின் கருத்துக்கள்தான் மேலே உள்ளது. மக்களை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் நல்லவர்களை போலவும் நடித்துக்கொண்டே இருக்கின்றனர்.இவைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அவர்களை அடக்கி ஒடுக்குவதில் மத்திய மாநில ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் இந்திய நாட்டில் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுகிறது ஆனால் இவைகளை தொழிலாளி வர்க்கம் எத்தனை காலம்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் நேற்று (23 .02 .11 ) இதுவரை டெல்லி மாநகரில் வரலாறு காணாத அளவில் தொழிலாளிகள் திரண்டு போராடி உள்ளனர்.
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு, பாதுகாப்புப் படை ஊழியர்கள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் பெடரேசன் ஆகியவற்றின் அறைகூவலுக்கிணங்க தில்லியில் லட்சக் கணக்கில் தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும், வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஊழியர்களும் அணி திரண்டனர். மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, யுடியுசி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் “நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்த பேரணி நடந்துக்கொண்டிருக்கும் போது நமது பாராளுமன்றத்தினுள் இந்திய நாட்டு ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாராம் எச்சூரி வாதிட்டுக்கொண்டிருந்தார்
"இந்தியாவில் இப்போது 2 வகையான மக்கள்தான் வசிக்கின்றனர். ஒரு பிரிவினர் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் அளவுக்கு ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் சக்தி உள்ளவர்கள்). மற்றவர்கள் பி.பி.எல். (வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்கள்).2,25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஓராண்டில் வரிச் சலுகை அளித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை உடனே கைவிட்டு ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க முற்போக்கு நடவடிக்கைகளை எடுங்கள்.
பணக்காரர்களுக்குக் கொடுக்கும் வரிச் சலுகையை ரத்து செய்து அந்தத் தொகைக்கு அனைவருக்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களைக் கிடைக்கச் செய்திருந்தால் விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றிலும் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் தேவையும் பெருகியிருக்கும். அதனால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றிருக்கும்.
பெட்ரோல் விலை 7 முறை உயர்வு: கடந்த 8 மாதங்களில் பெட்ரோலின் விலையை 7 முறை உயர்த்தியிருக்கிறீர்கள். பெட்ரோலியத் துறை மூலம் மட்டுமே ரூ.2,22,000 கோடி திரட்டியிருக்கிறீர்கள். இதன் மூலம் பணவீக்கத்தை நீங்களே தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.
ஏழைகளுக்குக் கொடுக்கும் உணவு மானியத் தொகையையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஒப்பிட்டு இரண்டுமே பொது நலனுக்கான மானியச் செலவுதான் என்று பிரதமர் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த வாதமே போலியானது.
அரிசி, கோதுமைக்கு தரும் மானியம் வளர்ச்சிக்கு எதிரானது. ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் அளிக்கும் வரிச் சலுகைகள் வளர்ச்சிக்கு உதவுவது என்று எப்படித்தான் நாக்கூசாமல் கூறுகிறீர்கள் என்றே வியப்பாக இருக்கிறது.
2-ஜி ஊழல்: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்குப் பிறகு இந்தத் துறையில் உள்ள தொழிலதிபர்கள் மீது வரி விதிப்பதில்லை என்று முடிவெடுத்தீர்கள். ஆனால் உரிமம் பெற்ற தொழில் அதிபர்களோ ஆறு மாதங்களுக்குள் அவற்றை 6 மடங்கு (600%) லாபத்துக்கு மற்றொரு தொழில் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். இந்த இடத்தில்தான் ஊழலே நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருகிறீர்கள்?
நாடாளுமன்ற கூட்டுக்குழு: நாடாளுமன்ற கூட்டுக்குழுவே விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணம், அரசு நிர்வாக எந்திரத்தைத் தொழிலதிபர்கள் எப்படி தங்களுடைய லாப நோக்கத்துக்கு ஏற்ப வளைக்கிறார்கள், அதற்கு எந்த நடைமுறைகள் எல்லாம் பயன்படுகின்றன என்று அறிவதற்காகத்தான். அதை அப்போதே ஏற்றிருந்தால் நாடாளுமன்றத்தின் ஒரு தொடர் வீணாகியிருக்காது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியா இது? சமுதாயத்தின் அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம் என்று முழங்குகிறீர்கள், ஆனால் நடைமுறையில் ஏழை, பணக்காரர் இடைவெளி பெருகும்வகையில்தான் நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அப்படியெல்லாம் இல்லை, இது வெறும் அனுமானம்தான் என்கிறீர்கள். ஏன் என்றால் சர்வதேசச் சந்தையில் இதுபோன்ற சேவைகளுக்கு அரசுகள் வசூலிக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இலவசமாகவே தொழில் அதிபர்களுக்கு வாரி வழங்குவது என்று முடிவு செய்திருந்ததால் உங்களைப் பொருத்தவரை இதில் வருவாய் இழப்பே கிடையாது.
35 கிலோ அரிசி திட்டம்: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வருவாயை இழக்காமல் அரசு பெற்றிருந்தால் குறைந்த விலைக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை என்ற பொது விநியோக திட்டத்தை நாட்டின் 80% மக்களுக்கு விரிவுபடுத்தியிருக்கலாம்; அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாகச் செலவிட்டிருக்கலாம்.
இவரது கேள்விகளுக்கு வழக்கம் போல கள்ள மவுனம் அல்லது மழுப்பல்கள் நிறைந்த பதிலை ஆட்சியாளர்கள் தரலாம். ஆனால் பி.பி.எல் ஐ எதிர்த்து ஐ.பி.எல் களத்தில் இறங்கும் பொது அவர்களை காத்திட இவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது என்பதற்கு மிகச்சமிபத்திய உதாரணம் துனிசியாவும், எகிப்தும்.